சூடானில் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 35 பேர் பலி!

 
சூடான்

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே தொடரும் மோதலில், ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூடானின் வடக்கு டார்ஃபர்  மாகாணத்தில் உள்ள ஹர அல் சவியா எனும் கிராமம் தற்போது துணை ராணுவத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள கிராம மக்கள் நேற்று மதியம் பஞ்சாயத்துக் கூட்டத்திற்காக ஒரே இடத்தில் திரண்டிருந்தனர்.

பொதுமக்கள் திரண்டிருந்த அந்தப் பகுதியைக் இலக்கு வைத்துச் சூடான் நாட்டு ராணுவம் திடீரென டிரோன் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியது. இதில் 35 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூடானில் கடந்த 2021-ல் ஆட்சியைப் பிடித்த ராணுவத் தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹனுக்கும், துணை ராணுவத் தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோவிற்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம்.

துணை ராணுவத்தைப் பொது ராணுவத்துடன் இணைக்கும் முயற்சியில் ஏற்பட்ட மோதல், கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் தீவிர உள்நாட்டுப்போராக மாறியது. தலைநகர் கார்டூமை ராணுவம் கைப்பற்றிய போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரு தரப்பிற்கும் இடையேயான வன்முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.