பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதலில் 112 குழந்தைகள் உட்பட 399 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் எல்லை தாண்டிய மோதல்களில், சுமார் 399 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான 4 மாத காலத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் 399 பேர் பலியாகியுள்ளனர். இந்த மோதலில் துரதிர்ஷ்டவசமாகக் கொல்லப்பட்டவர்களில் 112 பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்குவர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையோரக் கிராமங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தொடர் வன்முறைகளால், தங்களின் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலே எல்லை தாண்டிய தலிபான் அமைப்பினரின் ஊடுருவல் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதல்கள் காரணமாக ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலும் பதற்றமும் நீடித்து வருகிறது.
