27 வயதில் கொடூரம்... 'கோஸ்ட்' பட ஹீரோயின் அனன்யா ராஜ் திடீர் மரணம்.. திரையுலகமே அதிர்ச்சி!
இதெல்லாம் சாகிற வயசா என்று இந்தி திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. '7 ஹவர்ஸ் டு ஹோ', 'கோஸ்ட்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 27 என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அனன்யா ராஜ் கடந்த ஜூலை 15-ம் தேதியன்றே தனது வீட்டில் உறக்கத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலமாக அவர் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான முழுமையான காரணத்தைக் குடும்பத்தினர் வெளியிடவில்லை.
இந்தியில் '7 ஹவர்ஸ் டு ஹோ', 'தி பைனல் எக்சிட்', 'கோஸ்ட்' போன்ற படங்களிலும், தெலுங்கில் 'தஹ்டிலி' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி பல வெப் தொடர்கள், குறும்படங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் திறமையான தொகுப்பாளராகப் பணியாற்றித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.
27 வயதிலேயே அனன்யா ராஜ் மறைந்த செய்தி கேட்டு இந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைப் பதிவிட்டு வருகின்றனர்.
