ரூ.10,000 ஆக உயரும் அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதியம்?! மத்திய அரசு பரிசீலனை!
இந்தியாவில் உள்ள முறைசாராத் தொழிலாளர்களுக்கு வொர்க்-அவுட் ஆகும் மிக முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டமான 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, இத்திட்டத்தில் இணையும் சந்தாதாரர்களுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையின் அடிப்படையில் 60 வயது பூர்த்தியடைந்தவுடன் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய வாழ்வாதாரச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது, ரூ.5,000 என்பது முதியோர்களின் மருத்துவ மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இதன் காரணமாக, அதிகபட்ச ஓய்வூதிய வரம்பை தற்போதிருக்கும் ரூ.5,000-லிருந்து ரூபாய் 10,000 ஆக இரட்டிப்பாக்க நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், முறைசாராத் தொழிலாளர்களின் முதுமைக் காலப் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னும் பலமடையும்.
அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பாராட்டு விழாவில் பங்கேற்ற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ். ராமன், இத்திட்டத்தின் அசுர வளர்ச்சி குறித்துப் பேசியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எளிய மக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மிக விரைவில் இதன் ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக மிகக் குறைந்த பிரீமியம் தொகையிலேயே இந்த ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் தங்களின் சேமிப்பு வங்கி கணக்கு மூலமாக இத்திட்டத்தில் இணைய முடியும். 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளின்படி, வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியற்றவர்கள் ஆவர்.
மத்திய அரசு ஓய்வூதியத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் போது, அதற்கேற்ப மாதந்தோறும் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையின் புதிய அட்டவணையை PFRDA முறைப்படி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
