நெகிழ்ச்சி.. 22 ஆண்டுகள் உறைந்திருந்த கருவின் மூலம் 54 வயதில் குழந்தை பெற்றெடுத்த தாய்!
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த தம்பதியினர், சாலை விபத்தில் இழந்த தனது மகனின் நினைவாக, 22 ஆண்டுகளுக்கு முன்பு உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருவின் மூலமாக மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.
ஏதென்ஸைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி (54) - கான்ஸ்டான்டினோஸ் (60) தம்பதியினரின் 21 வயது மகன் கடந்த ஆண்டு சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே மகனை இழந்த தம்பதியினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
மகனின் இழப்பிலிருந்து மீள முடியாத தம்பதியினர், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004-ஆம் ஆண்டில் தங்களது சொந்த கருமுட்டை மற்றும் உயிரணுவைச் சேர்த்து ஆய்வகத்தில் உறைநிலையில் பாதுகாத்து வைத்திருந்த கருவை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்தனர்.
கிரீஸ் நாட்டுச் சட்டத்தின்படி 54 வயது வரை மட்டுமே பெண்கள் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி உண்டு என்பதால், இவர்களுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருந்தது. அரசாங்கத்தின் கடுமையான விதிகளையும் வயதின் தடையையும் தாண்டி மருத்துவர்களின் தீவிர முயற்சியால் கிறிஸ்டினா கர்ப்பமானார்.
தற்போது அவருக்கு 3.5 கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது மறைந்த அன்பு மகன் ஜார்ஜஸின் நினைவாகப் புதிதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு 'ஜார்ஜியா' என்று தம்பதியினர் பெயரிட்டுள்ளனர்.
