விபத்தை வென்ற விஸ்வரூபம் - சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி UPSC-யில் முத்திரை பதித்த அதிரா சுகதன்!

 
அதிரா சுகதன் அதிரா சுகதன்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் பெண் அதிரா சுகதன், கடுமையான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தனது மன உறுதியால் முறியடித்து, யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்துள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கோரமான சாலை விபத்து, அதிரா சுகதனின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியது. அந்த விபத்தில் அவருக்குக் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதுடன், தற்காலிகமாக நினைவாற்றல் இழப்பும் ஏற்பட்டது. நடக்கும் திறனை இழந்து சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை ஏற்பட்டாலும், அவரது ஐஏஎஸ் கனவு மட்டும் மங்கவில்லை.

 UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

விபத்திற்குப் பிறகு மீண்டும் படிக்கத் தொடங்கிய அதிராவுக்கு, பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், சளைக்காமல் மீண்டும் மீண்டும் படித்துத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். தற்போது வெளியாகியுள்ள யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில், தேசிய அளவில் 483-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்த வெற்றி அவருக்கு இந்தியக் குடிமைப் பணிகளில் சேர வாய்ப்பளித்தாலும், அவரது இறுதி இலக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆவதுதான். எனவே, தனது தரவரிசையை உயர்த்தி ஐஏஎஸ் கனவை நனவாக்க மீண்டும் மீண்டும் தேர்வு எழுதத் தயாராக இருப்பதாக அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

UPSC Exam1

கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணின் வெற்றி குறித்துப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, உடல் ரீதியான சவால்களைக் காட்டிலும் மன ரீதியான உறுதியே ஒருவரை வெற்றியாளராக மாற்றும் என்பதற்கு அதிரா ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். "விபத்து என் உடலை முடக்கலாம், ஆனால் என் எண்ணங்களை முடக்க முடியாது"  என்ற கருத்தை அதிரா தனது செயலின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.