வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 'கத்திரி வெயில்' எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபோட்டு வரும் வேளையிலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல இடங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், மதியத்திற்குப் பிறகு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இது வெப்பத்தின் தாக்கத்தைச் சற்று குறைத்து, நிலத்தடி நீர் மட்டத்திற்கும் கை கொடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விடச் சற்று அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
