ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஓமன் அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமனின் கசாப் துறைமுகம் அருகே சென்ற கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத பொருட்கள் மோதியதாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு கப்பலின் பின்பகுதியிலும், மற்றொரு கப்பலின் என்ஜின் அறையிலும் தாக்குதல் நடந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், அனுமதியற்ற வழியில் ரகசியமாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படைத் தகவல் வெளியிட்டுள்ளது.
கப்பல்கள் தங்களது அடையாளக் கருவிகளை அணைத்துவிட்டுச் சென்றதாக ஈரான் குற்றம்சாட்டினாலும், கண்ணிவெடித் தாக்குதல் குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.முக்கியக் கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் இந்தச் சம்பவங்கள் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளன
