“டெல்லியில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது” - சீமான்
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நீதி விசாரணை கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சம்பவங்கள் குறித்துச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்காமல், அதற்கு எதிராக நீதி கேட்டு நாடாளுமன்றம் நோக்கி அமைதியாகப் பேரணி சென்ற மாணவர்கள் மீது அரச வன்முறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது."
டெல்லியில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நியாயமான போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரலை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்றும் கூறியுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உடனடியாகச் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
