600 வருட பழமையான மசூதியை இடிக்க முயற்சி - மத்தியப் பிரதேசத்தில் பதற்றம்.. பொதுமக்கள் போராட்டம்!

 
மத்திய பிரதேஷம் 600 வருட பழமையான மசூதி மறியல் இடிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கும்பமேளா பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க 600 ஆண்டுகள் பழமையான மசூதியை இடிக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில், வரும் 2028-ஆம் ஆண்டு உஜ்ஜைனில் ஷிப்ரா நதிக்கரையில் சிம் ராஸ்தா கும்பமேளா நடைபெறவுள்ளது. இதற்காகப் பக்தர்களின் வசதிக்காகச் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக உஜ்ஜைனில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான 'ஷாஹி மசூதி'யின் ஒரு பகுதியையும் அகற்றத் திட்டமிடப்பட்டது. மசூதியை இடிக்காமல் அதற்கு எதிரே உள்ள கட்டடங்களை அகற்றிச் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை மசூதியின் ஒரு பகுதியை இடிக்க அதிகாரிகள் வந்தபோது போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது காவல்துறை மற்றும் அதிகாரிகளை நோக்கிப் பொதுமக்கள் தரப்பிலிருந்து கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைவைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் விரைவுப் படையினரும், கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் உஜ்ஜைன் நகரில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.