"நடிகை ஸ்ரீதேவியின் 4.77 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி?! - போனி கபூர், ஜான்வி கபூர் நீதிமன்றத்தில் வழக்கு... செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

 
ஸ்ரீதேவி போனிகபூர் ஸ்ரீதேவி போனிகபூர்

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான சென்னை ஈசிஆரில் உள்ள நிலம் தொடர்பாக, அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள விவகாரம் கோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் சென்னையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகக் கூறி, அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி, குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஜான்வி ஸ்ரீதேவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1988ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 4.77 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலம் தற்போது பல கோடி ரூபாய் மதிப்புடையது எனக் கருதப்படுகிறது. ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு, இந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி ஒரு பெண்மணியும் அவரது இரண்டு குழந்தைகளும் கடந்த 2025ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த நில விவகாரத்தில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்றும், அந்தப் பெண்மணியின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் போனி கபூர் தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 1, 2025 அன்று கபூர் குடும்பத்தின் மனுவைத் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிமன்றம், வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.

ஜான்வி

மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவால் அதிருப்தியடைந்த போனி கபூர், நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த நிலம் முறைப்படி ஸ்ரீதேவியால் வாங்கப்பட்டது என்றும், அதில் மூன்றாம் நபர்கள் உரிமை கோருவது சட்டப்படி செல்லாது என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். மேலும், ஆதாரமற்ற வழக்குகளை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.