பேருந்து நடத்துநரிடம் கத்திமுனையில் பணப்பை பறிக்க முயற்சி... 2 பேர் கைது!

 
பணப்பை
 


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மினிபஸ் கண்டக்டரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணப்பையை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சுப்புராஜ் (28). இவர் தனியார் மினி பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் இலுப்பையூரணி பஸ் நிறுத்தத்தில் இருந்து இவர் பணியாற்றக்கூடிய மினிபஸ் புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 3 பேர் பஸ் அருகில் நின்று கொண்டிருந்த சுப்புராஜிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நடத்துனர்

அவர் பணம் தர மறுத்ததால், அவர்கள் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பணப்பையை கேட்டு மிரட்டினா். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பராஜ் கூச்சலிட்டார்.  இதை பார்த்த பஸ் பயணிகளும், அப்பகுதியிலிருந்த மக்களும் திரண்டு வருவதை பார்த்த 3 பேரும் கத்தியுடன் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

நடத்துனர்

இதில், சுப்புராஜிடம் கத்தியைகாட்டி பணப்பையை பறிக்க முயன்றவர்கள், கோவில்பட்டி வள்ளுவர் நகர் 4-வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (30), வடக்கு இலுப்பையூரணி கிழக்குத் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் மகேஸ்வரன் (37), இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த பெருமாள் மகன் மாரிமுத்து என தெரிய வந்தது. இதில் சரவணன், மகேஸ்வரன் ஆகிய 2 பேரை நேற்று கிழக்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாரிமுத்துவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.