காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் பன்னூன் கொலை முயற்சி வழக்கு; இந்தியர் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

 
காலிஸ்தான் பயங்கரவாத தலைவர் பன்னூன் நிகில் குப்தா

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவரும், இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை நியூயார்க்கில் வைத்துக் கொலை செய்யச் சதி நடந்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியிருந்தது.

குர்பத்வந்த் சிங் பன்னூன்

இந்த சதிதிட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்தியக் குடிமகனான நிகில் குப்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி நியூயார்க் பெடரல் நீதிமன்றம் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் குர்பத்வந்த் சிங் பன்னூனை இந்திய அரசு ஏற்கனவே பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

காலிஸ்தான்

பன்னூனைக் கொலை செய்யத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சதித் திட்டத்திற்கும் இந்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என இந்தியா ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசின் கொள்கைக்கு எதிரானது எனத் தெரிவித்திருந்த மத்திய அரசு, இது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்ற இவ்வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.