கொலை முயற்சி... காவல் ஆய்வாளரைத் தாக்கிய வழக்கறிஞருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
காவல் ஆய்வாளரைத் தாக்கிக் கொலை செய்ய முயன்றதுடன், அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வழக்கறிஞர் சீனிவாச பிரசாத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சீனிவாச பிரசாத். கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி, காவல் ஆய்வாளர் பீட்டர் பால்துரை தனது அரசுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, வழக்கறிஞர் சீனிவாச பிரசாத் அவரைத் தாக்கிக் கொலை செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.

காவல் ஆய்வாளரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உதவி அமர்வு நீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சாட்சிகள் மற்றும் வலுவான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி சி. அசோக்குமார் இவ்வழக்கில் தீர்ப்பளித்தார். காவல் ஆய்வாளர் பீட்டர் பால்துரையைத் தாக்கிக் கொலை செய்ய முயன்றது மற்றும் அரசுப் பணியைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து, குற்றவாளியான வழக்கறிஞர் சீனிவாச பிரசாத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.12,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரசுப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் வழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு, சட்ட மற்றும் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
