ஏ.டி.எம் செல்வோர் கவனத்திற்கு.. வயதானவர்களை குறி வைத்து பணம் திருடிய பலே கில்லாடி கைது..!!

 
ஏ.டி.எம் மோசடி

திருப்பத்தூர் அடுத்த கந்திலி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஏடிஎம்மில் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்ற முதியவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கத்தெரியாததை கண்ட வாலிபர் ஒருவர் அவருக்கு பணத்தை எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை வாங்கியுள்ளார். முதியவருக்கு பணத்தை எடுத்து தருவது போல் நடித்து, பின் ஏடிஎம் மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி அவரிடம் வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துள்ளார்.

ஆனால், மர்ம நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆனந்தன், தனது வங்கி ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்ததாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து, அவரை சோதனை செய்தபோது ஆனந்தனின் ஏடிஎம் கார்டு சேர்த்து 20க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகளை வைத்திருந்தது கண்டு அதிர்ந்துள்ளனர். இதையடுத்து அவரை கந்திலி காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முனிராஜ் என்பது தெரியவந்தது. மேலும் இவர் பல்வேறு இடங்களில் காவலாளிகள் இல்லாத ஏடிஎம் வாசலில் நின்று கொண்டு, முதியவர்கள் மற்றும் ஏடிஎம் மிஷினை பயன்படுத்த தெரியாதவர்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி கார்டை வாங்கி வேறு கார்டை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.

ஏமார்ந்தவர்கள் விலகிச்சென்றதும், அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து முனிராஜ் செலவு செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முனிராஜை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web