ஆடி தள்ளுபடி... ரூ.1-க்கு ஆடைகள் விற்பனை... அதிகாலையிலேயே பெண்கள் முண்டியடித்ததால் திருவள்ளூரில் பரபரப்பு!
திருவள்ளூரில் ஆடித் தள்ளுபடியை முன்னிட்டு ஆடைகள் வெறும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், கடையின் முன் பெண்கள் கட்டுக்கடங்காமல் திரண்டு ஆடைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
திருவள்ளூர் பிரதான சாலையில் இயங்கி வரும் ஜவுளிக் கடை ஒன்று, ஆடி மாதக் கழிவுத் தள்ளுபடி விற்பனையை முன்னிட்டுப் பெண்களுக்கு பிரத்யேகச் சலுகை ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி, பெண்கள் அணியும் 'டாப்ஸ்' வகை ஆடைகள் வெறும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் சலுகை குறித்த தகவல் பரவியதும், இன்று காலை முதலே கடையின் முன் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு குவிந்தனர். பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆடைகளை அள்ளிச் சென்றதால், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துத் டாப்களும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் சாலையில் திரண்டதால், திருவள்ளூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
