தவெகவில் கட்சிப் பதவிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் - லீக்கான ஆடியோவால் பரபரப்பு!

 
தவெக லஞ்சம் ஆடியோ

ஆளும் தவெகவில் பேரூராட்சி செயலாளர் மற்றும் தலைவர் பதவி வழங்குவதற்காக, அக்கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகி ரூ. 6 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளராகப் பொறுப்பில் உள்ள மாரிமுத்து என்பவர், தொலைபேசி வாயிலாகப் பேரூராட்சி செயலாளர் மற்றும் தலைவர் பதவி வழங்குவது குறித்துப் பேசிய ஆடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில், குறிப்பிட்ட பதவிகளைப் பெறுவதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் கோரும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

விஜய் பிரச்சாரம்

ஆளும் கட்சியில் உள்ள ஒரு நிர்வாகியே கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்காக வெளிப்படையாகப் பணத்தைக் கேட்கும் இந்த ஆடியோ பதிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் ஆளுங்கட்சியில் இத்தகைய முறைகேடுகள் மற்றும் லஞ்சப் பேரம் தலைதூக்கியிருப்பது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைமை உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீவிரக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.