5 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுடன் பேசினார் ஆங் சான் சூகி... வைரல் வீடியோ!
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு தனது மகன் கிம் ஆரிஸுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். பின்னர் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட அவர், தற்போது தலைநகர் நேபிடாவில் ரகசிய இடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
20 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்
லண்டனில் உள்ள மியான்மர் தூதரகத்திலிருந்து அவரது மகன் கிம் ஆரிஸ் தொலைபேசி வாயிலாகத் தாயாருடன் சுமார் 20 நிமிடங்கள் பேசினார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தாயுடன் நேரடியாகப் பேச முடியாத நிலையில், இந்த உரையாடல் தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
81 வயதாகும் ஆங் சான் சூகி மற்றும் மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கிம் ஆரிஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒரு உரையாடல் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கான உரிமையையோ, ஆங் சான் சூகியின் சுதந்திரத்தையோ உறுதிப்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
