ஆஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார்! 10 பேர் படுகாயம் - பரபரப்பு வீடியோ!

 
ஆஸ்திரேலியா

 

ஆஸ்திரேலியாவில் ரக்பி ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டல் நகரில் ரக்பி தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் அணியான நியூகேஸ்டல் நைட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை தொடர்ந்து, அந்த அணிக்கு ஆதரவாக ஏராளமான ரசிகர்கள் சாலையில் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், ரசிகர்கள் கூட்டம் இருந்த பகுதியில் கார் ஒன்று திடீரென புகுந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் மோதியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 குழந்தைகளும் அடங்குவர்.காயமடைந்தவர்களில் 5 வயது சிறுமி மற்றும் 67 வயது முதியவர் ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கூட்டத்திற்குள் காரை ஓட்டிச் சென்ற 18 வயது இளைஞரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட தகவலின்படி, இளைஞர் காரை வேகமாக இயக்கிய பின்னர் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், பயங்கரவாத சம்பவமாக கருதப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ரக்பி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூடியிருந்த பகுதியில் கார் புகுந்து 10 பேர் காயமடைந்த சம்பவம் நியூகேஸ்டல் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.