பிரபல எழுத்தாளரும், அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்!
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்களைத் தனது நாவல்களால் கவர்ந்த பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86-வது வயதில் காலமானார். தனது வீட்டில் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் அமைதியான முறையில் காலமானதாக ‘ஹார்ப்பர்காலின்ஸ்’ பதிப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐம்பதாண்டு கால எழுத்துலகப் பயணத்தில் இவரது நாவல்கள் 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, 1976-ல் வெளிவந்த இவரது முதல் நாவலான ‘நாட் அ பெனி மோர், நாட் அ பெனி லெஸ்’ மற்றும் 1979-ல் வெளியான ‘கேன் & ஏபெல்’ ஆகியவை உலகப் புகழ்பெற்றவை.
எழுத்துலகைத் தாண்டி இவரது அரசியல் வாழ்க்கையும் பல திருப்பங்கள் நிறைந்தது. கடந்த 1969-ஆம் ஆண்டு தனது 29-வது வயதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு நிதி இழப்புகள் மற்றும் ஊடகச் சர்ச்சைகளுக்குப் பிறகு 1985-ல் கட்சியின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். எனினும், 1987-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் பொய்ச் சாட்சியம் அளித்த புகாரைத் தொடர்ந்து, 2001-ல் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டு புரோஸ்டேட் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். இவரது இறுதி நாவலான ‘ஆடம் அண்ட் ஈவ்’ இன்று வெளியீடு காணவிருந்தது குறிப்பிடத்தக்கது. 2024-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையிலிருந்து ஓய்வுபெற்ற இவருக்கு, பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அறிவியலாளருமான இவரது மனைவி மேரி இறுதிவரை உறுதுணையாக இருந்துள்ளார்.
