அசத்தல் ... 50கிமீ கடலில் நீந்தி ஆட்டிசம் சிறுவன் ஆசிய சாதனை!
சென்னையில் வசித்து வரும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் 50 கிமீ கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளான். பல்வேறு தரப்பிலிருந்தும் இவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. ஹரேஷ் பரத் மோகன் என்ற சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஹரேஷின் சாதனை குறித்து அவரது தாய் நிர்மலா தேவி, "என் மகன் ஹரேஷ் ஒன்றரை வயது ஆனபோது தான் அவனுக்கு ஆட்டிசம் என எங்களுக்கு புரிந்தது. துறுதுறுவென எங்கள் குழந்தை விளையாடவே இல்லை. பேச்சும் வரவில்லை. இதனால் படிப்பு என்பது அவனுக்கு எட்டாக்கனியானது. அவனுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபட வைக்கலாம் என்று பார்த்தபோது நீர் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
நீரில் விளையாடுவது என்றால் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டே இருந்தான். இதனால் நீச்சல் கற்றுக் கொடுக்கலாம் என முடிவு செய்தோம். நீச்சலில் அவன் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்று பயிற்சியாளரை வைத்து கற்றுக் கொடுத்தோம்.
சக போட்டியாளருடன் போட்டியாக நீந்துவது குறித்து அவனுக்கு ஆர்வம் இல்லை.அவனுக்கு ஸ்டாமினா நன்றாக இருக்கிறது. தனியே அவனுக்குப் பயிற்சி கொடுங்கள் என நண்பர்கள், சில பயிற்சியாளர்கள் சொன்னார்கள். எனவே தனியாக பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் பயிற்சியாளர் கார்த்திக் குணசேகரன் என் மகனை அவர், தன் உடன் பிறந்த தம்பி போல் பார்த்துக்கொண்டார். நீண்ட தூரம் நீந்துவதில் அவனுக்கு ஆர்வம் வந்த பிறகு,முதலில் நாங்கள் 2023 அக்டோபர் 7ம் தேதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தினான். கடலில் நிலவரம் மிகவும் மோசமாக இருந்ததால் அவன் ஒரு அடி நகர்ந்தால் அலை அவனை மூன்று அடி பின்னுக்குத் தள்ளியது. அடுத்து அதை விடப் பெரிதாகச் செய்ய வேண்டும் என யோசித்தோம். அதன்படி தான் மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு வருவது எனத் திட்டமிட்டோம்.
அதன்படி மகாபலிபுரத்தில் நள்ளிரவில் நீந்தத் தொடங்கி சென்னை கண்ணகி சிலையை 15 மணி நேரம் நீந்தியுள்ளான். இதற்காக 5 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துள்ளோம். கடலில் நீந்திய போது உப்பு நீர் பட்டு வாய் எல்லாம் வெந்து விட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் இந்தச் சாதனையைச் செய்து இருக்கிறான். இது ஓர் ஆசிய சாதனை. இவனுடைய இந்த சாதனை இவனைப் போன்ற மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமாகவும் தூண்டுதலாகவும் இருக்கும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!