தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு - செப்.23ல் அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவு!

 
ஆட்டோ

தமிழகத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை மாற்றி அமைப்பது மற்றும் புதிய கட்டண நிர்ணயம் குறித்து விவாதிக்க வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் எனப் போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 என அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகளாகக் கட்டணம் மாற்றியமைக்கப்படாத சூழல் நிலவி வருகிறது.

ஆட்டோ ஆட்டோக்கள்

எரிபொருள் விலை உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தற்போது குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.45 ஆகவும், அதைக் கடந்து செல்லும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்குமான கட்டணத்தை ரூ.20 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று நுகர்வோர் அமைப்புகளும் சங்கத்தினரும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆட்டோ

பொதுமக்களின் கருத்துகள், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கைகள் ஆகியவற்றை விரிவாகக் பரிசீலிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதியன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் ஆட்டோ கட்டண மாற்றம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.