திருத்தணி மலைப்பாதையில் ஆட்டோக்கள் செல்ல 3 நாட்கள் தடை!

 
திருத்தணி திருத்தணி

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்குத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வரும் நாட்களில் விசேஷங்கள் அடுத்தடுத்து வருவதால், மலைக்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தணி

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று ஏப்ரல் 7  முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 12ம் தேதி வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை 1  ஆகிய மூன்று நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல அனுமதி கிடையாது:

ஆட்டோக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில் நுழைவுப் பகுதியிலிருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் எவ்விதக் கட்டணமுமின்றி கோவில் பேருந்துகளில் பயணம் செய்யலாம். பைக்குகளில் செல்லும் பக்தர்கள் வழக்கம் போல் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கோவிலில் உள்ள இடவசதிக்கு ஏற்ப, கார்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

திருத்தணி

தமிழ் புத்தாண்டு மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த வருவார்கள் என்பதால், மலைப்பாதையில் நெரிசலைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செங்குத்தான மலைப்பாதையில் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.