பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு!

 
மரம் விழுந்து ஆட்டோ விபத்து

தூத்துக்குடி மாவட்டத்த்ஹில் அம்மன்புரம் அருகே பூனை குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி அருகே உள்ள சீனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ரெஜிலா (50) என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நேற்று திங்கள்கிழமை, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை சிகிச்சைக்காக நாசரேத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செந்தில்குமார் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். 

ஹெல்மெட் அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஓட்டுநருக்கு அபராதம்..!!

ஆட்டோவில் சண்முகவேலுடன் அவரது தாய் சிவக்கனி, தங்கை கலைச்செல்வி மற்றும் தம்பி விக்னேஷ் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ஆட்டோ அம்மன்புரத்தை அடுத்த மேலப்புதுக்குடி வடக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பூனை குறுக்கே பாய்ந்துள்ளது. பதற்றமடைந்த செந்தில்குமார் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் ஆட்டோவின் அடியில் சிக்கிய செந்தில்குமார், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த கலைச்செல்விக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

ஷேர் ஆட்டோ

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரும்பூர் போலீஸார், செந்தில்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.