நாளை ஆவணி அவிட்டம்... திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து!
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி அவிட்டப் பெருவிழாவை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்யத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும். இந்த நேரத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், தங்கக் கவசம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெறும்.

சிறப்பு பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுப் பக்தர்கள் வழக்கம்போல் மூலவரைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
திருத்தணி கோயிலுக்கு நாளை வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த 4 மணி நேர இடைவெளியைக் கவனத்தில் கொண்டு, தங்களது பயணத்தையும் சுவாமி தரிசன நேரத்தையும் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுமாறு கோயில் இணை ஆணையர் க. ரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
