ஆவணி கடைசி சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி.. எகிறிய பூக்களின் விலை - மல்லிகை கிலோ ரூ.2,000-க்கு விற்பனை!
திருநெல்வேலி சந்திப்பு பூ மார்க்கெட்டில் முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவைக் முன்னிட்டுப் பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.
மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று முன் தினம் வரை கிலோ ரூ.300-க்கு விற்றுவந்த செவ்வந்திப்பூ தற்போது ரூ.500-க்கு விற்கப்படுகிறது. ரோஜாப்பூவை பொறுத்தவரை 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.320-க்கும், ஊட்டி ரோஸ் ஒன்று ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கேந்திப்பூ மட்டும் சற்றுக் குறைவாக ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா காரணமாகச் சந்தையில் பூக்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. மறுபுறம், கடும் வெயில் மற்றும் வறட்சியான சூழலால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் முக்கியக் காரணமாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
