பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... டெல்லியில் தாக்குதல் நடத்த சதி... மும்பையில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்!

 
பயங்கரவாதிகள் ஏடிஎஸ் பயங்கரவாதிகள் ஏடிஎஸ்

நாட்டின் தலைநகரான டெல்லியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்படுவதாக டெல்லி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர வேட்டையில், மும்பையில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியுள்ளனர்.

டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவினர், மகாராஷ்டிர மாநிலப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ATS) போலீசாருடன் இணைந்து இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

முசாப் அகமது மற்றும் முகமது ஹமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சர்வதேசப் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் (ISIS) மற்றும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்று, அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய இடங்களில் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். சரியான நேரத்தில் கிடைத்த உளவுத்துறைத் தகவலால், ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாருடைய தூண்டுதல்?: இவர்களுக்குப் பின்னால் இருக்கும் மூளை எது? தாக்குதலுக்காக வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் எங்குப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் யாராவது டெல்லி அல்லது மும்பையில் பதுங்கியுள்ளனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.