வாழை இலையில் அயோத்தி பாலராமர்.. குவியும் பாராட்டுக்கள்!
ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு நாடெங்கும் பக்தி பரவசம் நிலவி வரும் வேளையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது கைவண்ணத்தால் அயோத்தி பாலராமரை வாழை இலையில் தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற இளைஞர், மகாவிஷ்ணுவின் 7-வது அவதாரமான ஸ்ரீராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு முழு பச்சை வாழை இலையில், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பாலராமரின் உருவத்தை மிகத் துல்லியமான நுணுக்கங்களுடன் வரைந்துள்ளார். ராமரின் கண்கள், ஆபரணங்கள் மற்றும் அந்த தெய்வீகப் புன்னகை என அனைத்தும் தத்ரூபமாக அமைந்துள்ளதால், இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் பக்தர்களின் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.

புருஷோத்தமன் ஏற்கனவே தனது 'நுண்ணிய கலை' மூலம் புகழ்பெற்றவர். இவர் வெறும் இலைகளில் மட்டுமல்லாது, புளியங்கொட்டைகள், சிறிய தானியங்கள் ஆகியவற்றிலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் உருவப்படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். "ராம நவமி தினத்தில் அயோத்தி ராமருக்கு எனது கலையின் மூலம் ஒரு காணிக்கை செலுத்த விரும்பினேன்" என அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் அறநெறி தவறாத 'மரியாத புருஷோத்தமன்' அவதாரமாகப் போற்றப்படும் ராமரின் அவதார தினம் இன்று தமிழகம் முதல் அயோத்தி வரை கோலாகலமாக அனுசரிக்கப்படுகிறது.
