அயோத்தி நன்கொடை விவகாரம்.. பிரதமருக்கு ராகுல் காந்தி அவசரக் கடிதம் - பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை!
அயோத்தி ராமர் கோயில் கட்ட பெறப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, சுதந்திரமான மற்றும் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இணைந்து எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம், இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கை அடிப்படையில் நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், அறக்கட்டளையின் நிதி பயன்பாடு மற்றும் நிலக் கொள்முதல் சார்ந்த விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே, இதுவரை சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த நன்கொடை மற்றும் செலவினங்களின் தணிக்கை செய்யப்பட்ட முழு நிதி விவரங்களையும் உடனடியாகப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனத் தங்களது கடிதத்தில் கோரியுள்ளனர்.
அயோத்தி கோயில் நிதி விவகாரத்தில் எழுந்துள்ள புகார்கள் லட்சக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர்கள், இது குறித்து நடுநிலையான மற்றும் சுயாதீன விசாரணை அமைப்புகள் மூலம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஒருவேளை நிதி முறைகேடுகள் நடைபெற்றிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்விதச் தயக்கமுமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
