4 அடி உயரம்... 20 கிலோ பிஸ்கட்டுகளால் தயாரான அயோத்தி ராமர் கோயில்... வைரலாகும் வீடியோ!

 
அயோத்தி

20 கிலோ பிஸ்கட்டுகளைப் பயன்படுத்தி, 4 அடி உயரத்தில், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலைப் போன்றே இளைஞர் வடிவமைத்திருக்கும் மாதிரி ராமர் கோயிலின் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி நகரில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள விடுதிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே நிரம்பி வருகின்றன.


 



108 அடி நீளத்திற்கு உருவாக்கப்பட்ட ஊதுபத்தி, 2,100 கிலோ எடை கொண்ட மணி, தங்கத்தினாலான கதவுகள் என்று இந்த கோயில் திறப்பு விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஒவ்வொன்றுமே தனிச்சிறப்புகளை கொண்டதாக இருக்கின்றன. இதற்கிடையே, பக்தர்களும் 2165  கிலோ எடையிலான லட்டு உட்பட  தங்கள் பங்கிற்கு ராமர் கோவிலை சிறப்பிக்கும் விதமாக தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் பகுதியைச் சேர்ந்த சோதான் கோஷ் என்ற நபர், பார்லே ஜி பிஸ்கட்டுகளைக் கொண்டு 4க்கு 4 அடி என்ற அளவில் ராமர் கோயில் மாடலை உருவாக்கி அனைவரையும் அசத்தியுள்ளார். சுமார் 20 கிலோ பிஸ்கட்டுகளைக் கொண்டு இந்த மாடல் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
சோதான் கோஷ் மற்றும் அவரது நண்பர்களின் கூட்டு முயற்சியில் 5 நாட்களில் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தெர்மாகோல், பிளைவுட் ஆகியவற்றுடன் பிஸ்கட்களையும் பயன்படுத்தி இந்த ராமர் கோயில் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி
இந்த பிஸ்கட் மாடல் கோயிலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதன் கீழே ராம நாமத்தை கமெண்டுகளாக பதிவு செய்து பக்தர்கள் தங்கள் பக்தியையும், பாராட்டுக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாட்டின் பெருமை, பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் மாடல்களை உருவாக்கும் நடவடிக்கையை இதற்கு முன்பும் பலமுறை சோதான் கோஷ் மேற்கொண்டிருக்கிறார். சந்திராயன் - 3 விண்கலத்தை இஸ்ரோ அமைப்பு நிலவுக்கு அனுப்பி வைத்த போதும், அதன் மாடல் ஒன்றை இவர் உருவாக்கினார். அந்த மாடலின் உள்ளே ராக்கெட் ஒன்றை அவர் பொருத்தியிருந்த நிலையில், அது வானில் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்றது. அதற்குப் பிறகு இந்த ராமர் கோயில் மாதிரியை அவர் உருவாக்கி உள்ளார்.

From around the web