ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை எதிரொலி... ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு!
காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ.4,500 வரையிலும், நாகர்கோவில், நெல்லை மற்றும் சென்னை வழித்தடங்களில் ரூ.6,500 வரையிலும், கோவை-சென்னை வழித்தடத்தில் ரூ.6,000 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் மட்டுமின்றி, தொடர் விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் ஆம்னி பேருந்துகளில் 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறிப்பாக, அடுத்த மாதம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான நாட்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்ல ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது கோடைக்கானலுக்கு ரூ.4,999, ஊட்டிக்கு ரூ.3,500 மற்றும் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு ரூ.3,000-க்கும் மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்களது பயணங்களைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
