ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
பேருந்து யுபிஐ

 

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (அக். 16) 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து

சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்!

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமான ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் இடங்கள் நிரம்பியுள்ளதால், பல பயணிகள் அரசு பேருந்துகளை நாடி வருகின்றனர்.

பேருந்து

கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், தற்காலிகப் பேருந்து நிலையங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று (அக். 15) 755 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சுமார் 1.25 லட்சம் பேர் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன் கூடுதலாக 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பண்டிகைக் காலப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து, அவர்கள் சிரமமின்றிப் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.