ஆயுத பூஜைக்கு பொரி விலை உயருமா? கிலோ அரிசி ரூ.43 ஆக அதிகரிப்பு!

 
பொரி

 

ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரிசி விலை உயர்வால் பொரியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் ஆயுத பூஜைக்காக இரவு, பகலாக பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொரி - தமிழ் விக்கிப்பீடியா

அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 19-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையில் பூஜைக்குப் படைக்கப்படும் முக்கிய பொருட்களில் பொரியும் ஒன்று. காவேரிப்பட்டணம் பகுதியில் தயாரிக்கப்படும் பொரி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

பொரி தயாரிப்பதற்குத் தேவையான அரிசி வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு ஒரு கிலோ அரிசி ரூ.33-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.43 ஆக உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மூலப்பொருள் செலவு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஒரு வாரமாகப் பெய்த மழையால் பொரி தயாரிக்கும் பணிகளும் சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளன.

ஆயுத பூஜை பொரி இன்னும் இருக்கா? சட்டுன்னு காலி செய்ய செம்ம யோசனை; நீங்களும் ட்ரை பண்ணுங்க!

ஒரு மூட்டை பொரி ரூ.380!

காவேரிப்பட்டணம் பகுதியில் தினமும் சுமார் 3,000 மூட்டைகள் பொரி தயாரிக்கப்படுகின்றன. தற்போது 100 லிட்டர் அளவுள்ள ஒரு மூட்டை பொரி ரூ.380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு படி பொரி ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

ஆயுத பூஜை நெருங்கும்போது பொரிக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் விலையும் சற்று உயரக்கூடும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பண்டிகைக்கான தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பொரி வாங்கும் பொதுமக்கள் விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்.