ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? சென்னை, தாம்பரம், ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை – போத்தனூர், தாம்பரம் – செங்கோட்டை, ஈரோடு – திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – போத்தனூர் சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 16-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06023), மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்டோபர் 17-ம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் ரயில் (06024), அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 18-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06033), மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்டோபர் 20-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்படும் ரயில் (06034), மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06089), மறுநாள் மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்டோபர் 20-ம் தேதி மதியம் 3 மணிக்குச் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் (06090), அக்டோபர் 21-ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

ஈரோடு – திருநெல்வேலி சிறப்பு ரயில்
ஈரோட்டில் இருந்து அக்டோபர் 16-ம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06145), அக்டோபர் 17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 20-ம் தேதி இரவு 11.40 மணிக்குப் புறப்படும் ரயில் (06146), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 19-ம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06083), மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அக்டோபர் 20-ம் தேதி மாலை 6.45 மணிக்குக் கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் (06084), மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 15-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களுக்கான ரயில் எண், பயண நேரம் மற்றும் இருக்கை கிடைப்பதை அதிகாரப்பூர்வ முன்பதிவு தளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
