நாடு முழுவதும் ஆயுதபூஜை, விஜயதசமி தசரா கொண்டாட்டங்கள் நிறைவு - தொழிலகங்களில், வியாபார இடங்களில் பூஜை செய்து வழிபாடு!
தமிழ்நாடு முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழாவின் பத்தாவது நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தொழில் மற்றும் வணிக இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் அனைத்து வகையான உபகரணங்களும் சுத்தப்படுத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனிப்புகள், பொரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டு மகிழ்ச்சி பரிமாறப்பட்டது. பல இடங்களில் மயான கொள்ளை, சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கல்விக் கடவுளான அன்னை சரஸ்வதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாகப் புத்தகங்களை வைத்து, வாழை இலை விரித்துச் சிறப்புப் படையலிட்டு மாணவர்கள் வழிபாடு நடத்தினர். சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பல்வேறு பழங்கள் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டன. மேலும், மக்கள் தங்கள் வாகனங்களைச் சுத்தமாகக் கழுவி, அவற்றுக்கும் மலர் தூவி சிறப்புப் பூஜை செய்தனர்.
விஜயதசமியை முன்னிட்டு திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரதான கோயில்களில் சிறப்புத் தரிசனங்கள் நடைபெற்று வருவதுடன், பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.
