உலக கோப்பைக்கு வந்த இடத்தில் திருமண ஷாப்பிங் போன பாபர் அசாம்.. வியப்பில் ரசிகர்கள்.!!

 
பாபர் அசாம்

உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், திருமண ஷாப்பிங் செய்திருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் முதல்முறையாக இந்தியா வந்துள்ளனர். ஐதராபாத்தில் தரையிறங்கியது முதல் பல்வேறு வித்தியாசமான உணவுகளை ருசித்து வருகின்றனர். ஐதராபாத் பிரியாணி, கபாப் உள்ளிட்ட உணவுகளை பார்சல் வாங்கி சென்று சாப்பிடும் அளவிற்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் சேட்டையை கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் அங்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலமாக பிரியாணி, கபாப், சாப்ஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தாலும் அந்த ஹோட்டல் உணவை தவிர்த்து, நகரின் பிரபல உணவகங்களில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனிடையே பாகிஸ்தான் அணி வீரர்களின் மோசமான செயல்பாடுகளுக்கு வீரர்களின் கவனம் திசை மாறியது காரணம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவுக்கு உலகக்கோப்பை விளையாட சென்றீர்களா அல்லது சுற்றுலா சென்றீர்களா என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்தியாவிலேயே திருமண ஷாப்பிங் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிரபல துணி கடை ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஷெர்வானி ஆடை வாங்கியதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் விலை உயர்ந்த அணிகலன்கள், நகைகளையும் பாபர் அசாம் வாங்கியுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

இதுவரை பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதேபோல் 7 போட்டிகளில் பாபர் அசாம் 241 ரன்களை விளாசி இருக்கிறார். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்று தத்தளித்து கொண்டிருக்கும் சூழலில், நடப்பாண்டு இறுதியில் நடக்கவுள்ள திருமணத்திற்காக பாபர் அசாம் ஷாப்பிங் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web