சேற்றில் சிக்கிய குட்டி யானை ... நீண்ட நேரம் போராடி மீட்பு!

 
குட்டி யானை குட்டி யானை

நீலகிரி மாவட்டம் ஓவேலி வனச்சரகத்திற்கு உட்பட்ட அம்புலிமலை வனப்பகுதியில் இருந்து நேற்று காலை யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது. அப்போது கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாகச் சென்ற ஒரு குட்டி யானை, ஓடைப் பகுதியில் தண்ணீர் குடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாகச் சேற்றில் சிக்கிக் கொண்டது. சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த குட்டி யானை பிளிறிய சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓவேலி வனச்சரகப் பணியாளர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் நீண்ட நேரம் போராடி குட்டி யானையைப் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானையை மீண்டும் அதன் தாயுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அந்த வனப்பகுதிக்கு அருகிலேயே தாய் யானை உள்ளிட்ட யானைகள் கூட்டம் நின்றிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குட்டி யானையை அங்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவித்தனர்.

பிரிந்து சென்ற குட்டி யானை மீண்டும் தனது தாயுடன் இணைந்து அடர் வனப்பகுதிக்குள் சென்ற காட்சியைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பெரும் நிம்மதியடைந்தனர். அதே சமயம் யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும், தங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குட்டி யானையின் நலனைத் தொடர்ந்து கண்காணிக்க வனத்துறை சார்பில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.