ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை - மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு!

 
ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு வழியிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரின் துரிதச் செயலால் தாயும் சேயும் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான நிவானிதா என்பவருக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ்

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பிரசவ வலி தீவிரமடைந்தது. இதனைக் கவனித்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் முத்துச்செல்வம், உடனடியாக வாகனத்தை ஒரு பாதுகாப்பான ஓரமாக நிறுத்தினார்.

தனது மருத்துவ அனுபவத்தைப் பயன்படுத்தி ஆம்புலன்சிலேயே அவசரப் பிரசவம் பார்த்த அவர், தாய்க்குத் தகுந்த உதவி செய்து அழகான பெண் குழந்தையைப் பிறக்கச் செய்தார். பின்னர் தாயும் சேயும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சரியான நேரத்தில் உரிய முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் முத்துச்செல்வத்திற்குப் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.