"ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்” - ரூ.130 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட்.. பூதாகரமாக கிளம்பும் விவகாரங்கள்!
சிறுமி பாலியல் வழக்கில் தனது பெயரைக் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல் இருப்பதற்காக, பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து செட்டில்மென்ட் செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளியான தொழிலதிபர் ஜெம் வீரமணி, அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம்பெறாமல் இருக்கத் தீவிரமாக முயன்றுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் முக்கிய அரசியல் புள்ளிகள் வரை பலருக்கு இவர் ரூ.70 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாகவும், இதற்காகச் சென்னை ஈசிஆர் மற்றும் உதகை பகுதிகளில் உள்ள சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை அவசர அவசரமாக ரூ.70 கோடிக்கு விற்று இந்தச் செட்டில்மென்ட்டைச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகன் மூலமாகவே இந்தத் தொகை பலருக்கும் கைமாறி உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அந்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனைக் கைது செய்வதற்குக் காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
