மோசமான வானிலை .. 4.5 லட்சம் பக்தர்கள் தரிசித்த நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோயில் பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. யாத்திரை தொடங்கியதிலிருந்து இதுவரை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பஹல்காம் மற்றும் பால்தால் வழிகளினூடே சென்று பனிலிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ரம்பன் மாவட்டப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு அபாயம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை யாத்திரை தொடராது என்றும், சீரான வானிலை நிலவிய பின்னரே பக்தர்கள் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
