மளிகைக் கடையில் திடீர் தீ.. சிலிண்டர்கள் வெடித்த பயங்கரம்! தாய், 5 வயது மகள் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் கேக்ரா பகுதியில் மளிகைக் கடை மற்றும் அதனுடன் இணைந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாய் மற்றும் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேக்ரா முக்கிய சந்தை பகுதியில் உள்ள இரு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் மளிகைக் கடை செயல்பட்டு வந்துள்ளது. அதன் மேல் தளத்தில் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
வியாழக்கிழமை காலை திடீரென கடையில் தீப்பிடித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தீ மளமளவென பரவிய நிலையில், கடையில் இருந்த இரண்டு கியாஸ் சிலிண்டர்களும் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பிடித்தபோது வீட்டின் மேல் தளத்தில் ஸ்வாதி ஜெயின் மற்றும் அவரது 5 வயது மகள் அனன்யா ஜெயின் இருந்துள்ளனர். புகை மற்றும் தீ காரணமாக அவர்களால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பிறகு தாய் மற்றும் மகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் ஸ்வாதியின் கணவர் அங்கூர் ஜெயினும் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், விசாரணை முடிவிலேயே தீ விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும்.மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ மற்றும் சிலிண்டர் வெடிப்பு காரணமாக கேக்ரா சந்தை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
