காயத்துடன் வலம்வரும் 'பாகுபலி' காட்டு யானை... மருந்து கலந்த களி உருண்டைகள் வழங்கி வனத்துறையினர் தீவிர சிகிச்சை!
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் நடமாடி வரும் 'பாகுபலி' என்று அழைக்கப்படும் காட்டு யானை காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. அந்த யானைக்குத் தொடர் சிகிச்சை வழங்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிறுமுகை வனச்சரக பணியாளர்கள் வேடர் காலனி பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 'பாகுபலி' எனப்படும் காட்டு யானையை அவர்கள் விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, அதன் வால் பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது.
-
இதுகுறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கும், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
-
தகவலின் பேரில், வச்சினம்பாளையம் பகுதியில் புகுந்த அந்த யானையைச் சிறுமுகை வனச்சரக அலுவலர் தினேஷ், அரசு வன கால்நடை உதவி மருத்துவ அலுவலர் விஜயராகவன் மற்றும் வனப்பணியாளர்கள் தீவிரமாகக் கண்காணித்தனர்.
-
விசாரணையில், மற்றொரு காட்டுயானையுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே பாகுபலி யானைக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
-
காயத்திற்கு யானையின் அருகில் சென்று நேரடியாக மருந்து செலுத்த முடியாது என்பதால், மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டன.
-
இதற்காக களி உருண்டை தயாரித்து, அதில் தேவையான மருந்துகளைக் கலந்து, பாகுபலி யானை வரும் வழியில் வாழை இலையில் வைக்கத் முடிவு செய்யப்பட்டது.
-
வனத்துறையினரின் திட்டப்படியே, மருந்து கலந்து வைக்கப்பட்ட களி உருண்டைகளைப் பாகுபலி யானையும் ஆர்வமுடன் சாப்பிட்டது.
யானையின் உடல்நிலை மற்றும் அதன் நடமாட்டத்தை வனப்பணியாளர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், தொடர் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
