பஹாமாஸில் சிறிய ரக விமானம் நடுக்கடலில் விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடான பஹாமாஸுக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சிறிய ரக விமான விபத்தில் உயிரிழந்தனர்.
-
விபத்து பின்னணி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான மரியோ லமர், தனது மனைவி லில்லி லமர் (79) மற்றும் பேரப்பிள்ளைகளான சோபி சோசா (28), கிறிஸ்டின் சோசா (22) ஆகியோருடன் சிறிய ரக விமானத்தில் பஹாமாசுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். 40 ஆண்டுகள் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்ட மரியோ லமரே விமானத்தை இயக்கியுள்ளார்.
-
நடுக்கடலில் விழுந்த விமானம்: பஹாமாஸ் சுற்றுலாவை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை மதியம் அண்ட்ரோஸ் தீவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவின் மையாமி நகருக்கு அவர்கள் புறப்பட்டனர். புறப்பட்ட சில நிமிடங்களில் 13 கி.மீ தொலைவில் பறந்துகொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலில் விபத்துக்குள்ளானது.
-

-
மீட்புப் பணிகள்: மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் மரியோ லமர் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
