பகீர்... 14 வயது பள்ளி மாணவியின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து கூட்டு பாலியல் வன்கொடுமை!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் சார்ரா நகரியத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தனது வீட்டின் அருகிலேயே உள்ள உள்ளூர் சந்தைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சந்தைக்குச் சென்ற தங்கள் மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவளைப் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் போனது குறித்து முறைப்படி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் போலீசார் அந்தப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, ஆள்நடமாட்டம் இல்லாத புதர் மண்டிய பகுதியில் அந்த சிறுமி உடைகள் கலைந்த நிலையில் சுயநினைவின்றிப் பரிதாபமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது. அந்த இடத்திற்கு அருகில் சந்தேகப்படும்படியாக மதுபோதையில் உலவிக் கொண்டிருந்த 2 பேரைப் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள் மாணவியின் முகத்தில் ஆபத்தான ரசாயனத்தைத் தெளித்து மாணவியை மயக்கமடையச் செய்துவிட்டு, இருவரும் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 14 வயது பள்ளி மாணவி மீட்கப்பட்டு அவசர மருத்துவப் பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அலிகார் போலீசார், பிடிபட்ட 2 காமக்கொடூரர்கள் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடூரச் சம்பவம், நாடு முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையு ஏற்படுத்தியுள்ளது.
