பகீர்... 3,00,000 மாத்திரைகள் பறிமுதல்... புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

 
புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை

புதுச்சேரியில் சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் போலி மருந்து தொழிற்சாலை நெட்வொர்க் கண்டறியப்பட்டுச் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தற்போது மேட்டுப்பாளையம் பகுதியில் மேலும் ஒரு போலி மருந்து தயாரிப்பு நிறுவனம் பிடிபட்டுள்ளது தமிழக மற்றும் புதுவை எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற ஒரு படகை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி, சட்டவிரோதமாக இலங்கைக்கு மருந்துப் பார்சல்கள் கடத்திச் செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளின் லேபிள்களை ஆராய்ந்த அதிகாரிகள், அதில் குறிப்பிடப்பட்டிருந்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால், அந்த நிறுவனம் தாங்கள் இலங்கைக்கு எந்த மருந்தையும் அனுப்பவில்லை என்றும், பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் தங்களுடைய தயாரிப்பே அல்ல (போலியானது) என்றும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த போலி வலி நிவாரணி (Painkillers) மாத்திரைகள் புதுச்சேரி, மேட்டுப்பாளையம் குருமாம்பேட்டில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. கடலோரக் காவல் படை கொடுத்த ரகசியத் தகவலின் பேரில், புதுச்சேரி போலீசார் அந்தத் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

மேட்டுப்பாளையம் தொழிற்சாலையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், சுமார் 3 லட்சம் போலி வலி நிவாரணி மாத்திரைகள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, போலி மருந்து தொழிற்சாலையின் உரிமையாளரான சண்முகாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மருந்து தொழிற்சாலையை நடத்தி வருவதும், இங்கு வேறு சில மருந்துகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போலி மருந்துகள் அனைத்தும் புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் ஆய்வகச் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து புதுச்சேரி போலீசார் தரப்பில் கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள பிரபாகரனின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மற்ற மருந்துகளுக்கு உரிய அரசு அனுமதி உள்ளதா அல்லது அவை அனைத்தும் போலியா என ஆய்வு செய்து வருகிறோம். இந்த போலி வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு மட்டும் கடத்தப்பட்டதா? அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளதா? இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார்? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்."

ஏற்கனவே புதுச்சேரியில் ராஜா என்பவர் நடத்திய போலி மருந்து நெட்வொர்க் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மேலும் ஒரு தொழிற்சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போலியாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதுச்சேரி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.