பகீர்... மாமியாரின் மூக்கை அறுத்துத் தூக்கிச் சென்ற மருமகன்!
ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்பப் பகை காரணமாக மாமியாரின் மூக்கை மருமகனே சிதைத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. குற்றவாளியான சோஹன்லால் மற்றும் அவரது மனைவி இடையே கடந்த ஓராண்டாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவரது மனைவி, சோஹன்லாலை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சோஹன்லாலின் மாமியார் தேவி, தனது மகள் மற்றும் மருமகனுக்கு இடையிலான மோதல் குறித்துப் புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் தேவியை வழிமறித்த சோஹன்லால், ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் தேவியின் மூக்கை வெட்டியுள்ளார். வெட்டப்பட்ட மூக்கின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு சோஹன்லால் அவ்விடத்திலிருந்து தப்பியோடியது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவி, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜலோர் மாவட்டப் போலீசார், தப்பியோடிய சோஹன்லாலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
