பகீர்... மது குடித்தப்படியே விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்!

 
மது விடைத்தாள் மது விடைத்தாள்

அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தி உருவாக்குகிறோம் என்கிற பொறுப்புணர்ச்சி கிடையாது... ஒரு மாணவனின் கடின உழைப்பும், எதிர்காலமும் நம் நேர்மையான பணியில் ஒளிந்திருக்கிறது என்கிற அக்கறை கிடையாது. மாணவர்களின் விடைத்தாள்களை மது அருந்தியபடியே ஆசிரியர் ஒருவர் திருத்திய அவலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்திலேயே மது அருந்தியபடி மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தியுள்ளார். ஒரு கையில் மதுக்கோப்பை, மறு கையில் பேனா என அவர் விடைத்தாள்களைக் கையாண்ட விதம் அங்கிருந்தவர்களை அதிரவைத்துள்ளது. இந்தக் காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மது விடைத்தாள்

சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி நிர்வாகம், அந்த ஆசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மது விடைத்தாள்

வழக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியரே, போதையில் விடைத்தாள்களைத் திருத்தியது மாணவர்களின் மதிப்பெண்களைப் பாதிக்குமே என்ற அச்சத்தைப் பெற்றோர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.