ரீல்ஸ் மோகத்தால் சோகம்... பால்கனியில் சாகசம் செய்த 14 வயது சிறுவன் தவறி விழுந்து பலி.!

 
மிதுன் மிதுன்

 
சமூக வலைதளங்களில் 'பிரபலம்' ஆக வேண்டும் என்ற ஆசை, ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துள்ள சோகம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது. மல்லாபூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மிதுன், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் ரீல்ஸ் போட்டு பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் எனத் துடித்துள்ளான். இதற்காக கடந்த 5-ம் தேதி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உயரமான கட்டிடத்தின் பால்கனி பகுதிக்குச் சென்றுள்ளான். அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் சாகசங்களைச் செய்துள்ளான்.

நண்பர்கள் இந்த சாகசத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மிதுன் நிலைதடுமாறி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தான். பல அடி உயரத்திலிருந்து விழுந்ததில் அவனுக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் தராமல், நேற்று மிதுன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.

mithun

தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "சமூக வலைதளங்களில் வரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளுக்காகத் தங்கள் உயிரைப் பணையம் வைக்க வேண்டாம்" எனப் பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் போலீசார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தால் ஒரு வளரும் உயிர் பாதியிலேயே பறிபோன சம்பவம், மல்லாபூர் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.