6 மாதங்களில் 21 கோடியை சுருட்டிய பலே கில்லாடி.. காய்கறி வியாபாரியை அதிரடி கைது !!

காய்கறி வியாபரி நூதன மோசடியில் ஈடுபட்டு 21 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்த ரிஷப் பகுதி நேர காய்கறி விற்பனையாளராக இருந்தார். ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் அவரின் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தை ஆதரிப்பதற்காக, அவர் வீட்டில் இருந்து பல்வேறு வேலைகளை முயற்சித்தார். அப்போதுதான் ஏற்கனவே ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட பழைய நண்பருடன் மீண்டும் இணைந்தார்.
அவரது நண்பர் தொலைபேசி எண்களின் பட்டியலை ரிஷப்பிடம் கொடுத்துள்ளார். அந்த எண்களை தொடர்பு கொள்ளும் ரிஷப் அவர்களை நம்ப வைத்து போலி வேலை வாய்ப்புகளை வழங்குவார். அதற்கு முன் பணம் கொடுக்க வேண்டும் என்பது கூறி ஏமாற்றி உள்ளார். அந்த வகையில் கடைசியாக ரிஷப்பிடம் ஏமாந்தவர், டெஹ்ராடூனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவர் ரூ.20 லட்சத்தை இழந்தவர்.
மேரியட் போன்வாய் ஹோட்டலின் இணையதளம் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கினார் ரிஷப். மேலும் ஹோட்டல் குழுவிற்கு மதிப்புரைகள் எழுத பகுதி நேர வேலைகளை வழங்குவதாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேரியட் போன்வாயை சேர்ந்தவர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களை தனது சக ஊழியரான சோனியாவிடம் அறிமுகப்படுத்தினார், அவர் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்வதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு போலி டெலிகிராம் குழுவையும் உருவாக்கினார். ஹோட்டலுக்கு நேர்மறையான மதிப்புரைகளை எழுதவும், போலி விருந்தினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் அவர் அவர்களிடம் கேட்டார். முதலில் ரூ.10,000 கொடுத்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். பிறகு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து அதிக முதலீடு செய்யும்படி அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் மக்கள் நிறைய பணத்தை முதலீடு செய்தவுடன், ரிஷப் தலைமறைவாகிவிட்டார். பணத்தை முதலீடு செய்தவர்களால் அவரை அணுக முடியவில்லை.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரிஷப் மீது மோசடி மற்றும் இதர குற்றங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த மோசடி மற்ற நாடுகளில் உள்ள கிரிமினல் குழுக்களுடன் தொடர்புடையது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த குழுக்கள் திருடப்பட்ட பணத்தை மற்ற நாடுகளுக்கு ரகசியமாக அனுப்புவதற்கு முன் வங்கிக் கணக்குகளை திறக்க இந்தியாவில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
ரிஷப்பை கைது செய்த பின்னர், இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரியது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. . அவர் 10 மாநிலங்களில் பல வழக்குகளில் தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்டது. மேலும் 6 மாதங்களில் 21 கோடி ரூபாய் அவர் கொள்ளையடித்துள்ளார். இந்த சிக்கலான மோசடிகளை கையாள்வது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.