“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...” கிருஷ்ண ஜெயந்தியும், கண்ணதாசனும்!

 
குழந்தை வரம் அருளும் கோகுலாஷ்டமி விரதம்!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... என்று இன்றளவிலும் கண்ணதாசனின் வரிகளைப் போற்றுகிறோம். கிருஷ்ணர் என்றாலே கூடவே அவரது புல்லாங்குழலும் நம் நினைவில் வரும். பட்டுப் போன மூங்கில் தான் புல்லாங்குழல். இந்த புல்லாங்குழல் தான் புருஷோத்தமனைப் பாடும். ஆனால் கண்ணதாசனோ ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்’ என எழுதி இருக்கிறார்.

ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும், பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும். மூங்கில் தான், இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு. பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழலாவது போல உலக ஆசைகள் பட்டுப் போன மனிதன், பரம்பொருளைச் சேர்கிறான் என்பது ஐதிகம். மூங்கில்கள் புருஷோத்தமனைப் பாடி தாங்களும் புல்லாங்குழல்களாக மாறுவதற்கு தவம் செய்ய வேண்டும்.
பகவத்கீதையில், கண்ணன் பசுக்களில் காமதேனு நான். யானைகளில் ஐராவதம் நான் என்கிறான். அப்படியானால், மற்ற பசுக்களிலும் யானைகளிலும் கண்ணன் இல்லையா என்றொரு சீடர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின் விளக்கம் இது. பசு என்ற படைப்பின் உச்சம் தான் காமதேனு. யானை என்கிற படைப்பின் உச்சம் தான் ஐராவதம்.

உண்மையில் ஒவ்வொரு பசுவும் காமதேனுவாகிற சாத்தியத்துடன் படைக்கப்பட்டது தான். ஒவ்வொரு யானையும் ஐராவதமாகும் சாத்தியமும் சக்தியும் கொண்டது தான். தன் படைப்பின் உச்சத்தை உணர்பவர் யாரோ அவருக்குள் இறைத்தன்மை அல்லது விழிப்பு நிகழ்கிறது. தன்னை உணர்ந்த ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உண்டு என்கிறார் ஒஷோ.

கண்ணதாசனின் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் சொல்லும் பாடம் இதுதான்!

மூங்கிலின் உச்சம், புல்லாங்குழலாவது. அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது. அடுத்த வரியில் “வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே! எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்” என்கிறார் . மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன. நந்தவனம், இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. மலரில் உள்ள மது, உலக இன்பங்களுக்கும் வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு. உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டு விட்டு, மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.

கண்ணனின் திருவுருவை,”கார்மேனி’ என்று வர்ணிப்பது வைணவ இலக்கியங்களில் நிறைய உண்டு. அந்த மேகங்கள், கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல், அதில் ஈடுபட்டு புகழ்ந்து பாட வேண்டுமாம். “பன்னீர் மலர் சொரியும் மேகங்களே! எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்” என்கிறார் கவிஞர்.

திருவரங்கத்தில், பெருமாள் தெற்கு நோக்கி, வடதிசைக்கு முதுகுகாட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார். தெற்குத்திசை, ஆழ்வார்களின் ஈரப்பசுந்தமிழ் படிந்தமையால் தென்திசையைப் பார்த்துப் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன் என்று வைணவ உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தென்திசைக்கு அப்படியொரு பெருமை. பாடலின் நான்காவது வரியில். ‘தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே! எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்’ என்கிறார் கவிஞர். இந்தப் பாடலில் தான் பெருமாளின் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் ஆகியவற்றுடன் நில்லாமல் தவழ்ந்த கோலத்தையும் பாடுகின்றார்.

“குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன். பாரதக் கதையின் நான்கு வரிச் சுருக்கமும் இந்தப் பாட்டில் உண்டு என்பது தான் சிறப்பு.

கண்ணதாசனின் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் சொல்லும் பாடம் இதுதான்!

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான்
அன்று பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணனின் பெருமையை பாடும் ஒவ்வொரு பாட்டும் இப்படியாக நாம் வாழ வேண்டிய முறையை நமக்கு கற்றுக் கொடுக்கின்றன.